Thursday, January 1, 2009

தமிழ் இணைய தளம் !

கீழ்க்காணும்
எமது இணைய தளத்துக்கு
வருகை தந்து
மகிழுங்கள் நண்பர்களே !

மேலும்
உங்களின் புதிய
ஆலோசனைகளை-
எமக்குத் தாருங்கள்
நண்பர்களே!

நாளையெனும் மூட மனம் !













நாளை நாளையென நன்மைசெய நாள்பார்த்து
வேளைதனை தள்ளுமது வீண்வாழ்க்கை வாழுமது
காலை எழுந்தமர்ந்து கதிரவனை காண்பதுவும்
சோலைக் குயில்பேச்சை செவியிரண்டில் கேட்பதுவும்

இல்லை தன்வசத்தில் என்றாலும் பேதையது
வில்லை உடைத்தபின்பு ஸ்ரீராமன் திருமணம்போல்
தொல்லைஎலாம் ஒழிந்தபின்னர் கடல்அலைகள் ஓய்ந்தபினர்
தில்லை அமர்ந்திருந்து நல்லதெலாம் செய்வமெனும்!

குளிக்க மறந்ததில்லை குச்சியினால் பல்துலக்கி
களிக்க மறந்ததில்லை ஊர்தோறும் சுற்றிவந்து
புளிக்க பேசுவதை ஒழித்ததில்லை ஊனுடம்பு
தெளிக்க நறுமணங்கள் தவறியதும் இல்லையது!

சேர்க்க மறந்ததில்லை சேர்த்தபொருள் காவல்
பார்க்க மறந்ததில்லை தன்பெண்டு தன்பிள்ளை
கோர்க்க மறந்ததில்லை நவமணிகள் என்றாலும்
மூர்க்கமனம் மூடமது சொல்லும் நாளையென!

-மோகன் பால்கி















என்னைக் கேட்டால்
கடவுள் தியானம் வாழ்வு
என்கிற வரிசையில்
நான்
வாழ்வுக்கே முன்னுரிமை தருவேன்!

ஏன் எனில்
சரியான வாழ்வு
வாழ்ந்தவொரு மனிதனுக்கே
சரியான தியானம் கை கூடுகிறது!
சரியான தியானம் கை கூடிய பின்னர்
அவனே 'சத்-சித்-ஆனந்த' இறைவனை
சதா சர்வ காலமும்
உணர்கிறான்!

ஆக
முதலில் சரியான வாழ்வு
இரண்டாவதாக சரியான தியானம்

மூன்றாவதாகவே
'கடவுளை உணர்தல்'
நிகழ்கிறது!

- மோகன் பால்கி
Copy Protected by Computer tech tips

ஒவ்வொரு அணுவிலும்
தனித் தன்மை
இப் பிரபஞ்சம் முழுவதிலும்!

ஆதரவற்ற காட்டு மலரிலும்
அற்புதம் கசியும் ஏதோ ஒன்று!

அதை விட மேலாம்
ஏதோ ஒன்று
நமக்குள்ளும் இல்லையா?


நமது விதையிலும்
ஆயிரம் வாய்ப்புகள்...

காலம் காத்திருக்கிறது-மவுனம் சுமந்து !

நம் கற்பகத் தருவின்
பங்களிப்பிற்காக !


-மோகன் பால்கி
10th March 1999
MBK Kavidhai from
Hypnotic Circle-Chennai Bulletin
Copy Protected by Computer tech tips

Wednesday, December 31, 2008

"மேற்க்காண்டைப்" பூரிப்போம்! 2009

காலமற்ற காலமிதில்
கணக்கொழிந்த விசும்பிதனில்

நொடிகளிது வருடமிது
எனநமது மனமிரையும்!

மனமற்ற 'மேற்பாழில்'
காலமிலை கணக்குமிலை!

மாற்றமொன்று தேவையென
தேறுகின்ற மாந்தமனம்

மாறிவிடும் தேறிவிடும்
வேறுவழி பார்த்துவிடும்!

ஊழ்தனையும் உட்பக்கம்
காண்டுவிடும் உள்வலியால்

மேதினியில் மேன்மைபல
"மெய்மையினால்" செய்திடுவோம் !

கடலுக்கு துவக்கமிலை
காற்றுக்கு முடிவுமிலை

காலத்தை அளப்பதற்கோ
"மின்மினிக்கு" வழியுமிலை!

நீளுகிறப் பெருவழியில்
இடைதோன்றி மறைமனுவின்

சிறுகணக்கு இதுவெனினும்
புத்தாண்டு வாழ்த்திநிற்போம் !

ஒன்றிரண்டு அச்சடித்த
பழந்தாள்கள் முடிவுபெற்று

புதுத்தாள்கள் புறப்படட்டும்
தவறில்லை முயற்சிக்கு-

ஆரம்பம் ஓரிடத்தில்
அமைத்திடுதல் அறிவுடைமை !

உலகத்தோடு ஒட்ட ஒழுகல்
முதற்கல்வி குறள் சொல்லும் !

உலகத்தார் போற்றுகின்ற
"மேற்க்காண்டைப்" பூரிப்போம்!

-மோகன் பால்கி
Copy Protected by