காலமற்ற காலமிதில்
கணக்கொழிந்த விசும்பிதனில்
நொடிகளிது வருடமிது
எனநமது மனமிரையும்!
மனமற்ற 'மேற்பாழில்'
காலமிலை கணக்குமிலை!
மாற்றமொன்று தேவையென
தேறுகின்ற மாந்தமனம்
மாறிவிடும் தேறிவிடும்
வேறுவழி பார்த்துவிடும்!
ஊழ்தனையும் உட்பக்கம்
காண்டுவிடும் உள்வலியால்
மேதினியில் மேன்மைபல
"மெய்மையினால்" செய்திடுவோம் !
கடலுக்கு துவக்கமிலை
காற்றுக்கு முடிவுமிலை
காலத்தை அளப்பதற்கோ
"மின்மினிக்கு" வழியுமிலை!
நீளுகிறப் பெருவழியில்
இடைதோன்றி மறைமனுவின்
சிறுகணக்கு இதுவெனினும்
புத்தாண்டு வாழ்த்திநிற்போம் !
ஒன்றிரண்டு அச்சடித்த
பழந்தாள்கள் முடிவுபெற்று
புதுத்தாள்கள் புறப்படட்டும்
தவறில்லை முயற்சிக்கு-
ஆரம்பம் ஓரிடத்தில்
அமைத்திடுதல் அறிவுடைமை !
உலகத்தோடு ஒட்ட ஒழுகல்
முதற்கல்வி குறள் சொல்லும் !
உலகத்தார் போற்றுகின்ற
"மேற்க்காண்டைப்" பூரிப்போம்!
-மோகன் பால்கி
Copy Protected by
No comments:
Post a Comment